புதன், 29 ஏப்ரல், 2015

36 - அவள் அப்படித்தான் | Aval Appadiththaan - 1978




















காலம் சிலரை மிகவும் கடினமாக கையாண்டு விடுகிறது. பிழை எங்கென்று யாரும் உய்த்துணர இயலாத நுட்பம் அது. அந்த மர்மம் தான் வாழ்க்கையின் சுவையை கூட்டுகிறது, எனினும் அதன் கொடூர வலியை தாங்கியவர்களின் எண்ணங்கள் வேறாக இருக்கலாம். அப்படி ஒரு விதியின் கைப்பிள்ளை ருத்ரைய்யா. அவரின் முதல் படம், ஒரே வெற்றிப்படம். எதையாவது செய்யவேண்டும் என்ற முனைப்பில் திரியும் ஆன்மா சராசரிகளுக்குள் சிக்குண்டு சிதைபடாமல், ஒரு அதியற்புத படைப்பை தந்து, தன்னை அலைகழித்த காலத்தை வெற்றி கண்டுவிட்டார் ருத்ரைய்யா. இந்த ஆண்டு மறைந்த அவரின் நினைவுகளுக்கு.. இந்தப்பதிவு. 

படத்தில் மூன்றே பாடல்கள். இயக்குநருக்கு தன் சுவடுகளை பதிக்க, எப்படி ஒரே படம் போதுமானதாக இருந்ததோ, அது போலவே, கங்கை அமரனுக்கும், தன் முத்திரையை பதிக்க, இந்த ஒரே பாடல் போதுமானதாகிவிட்டது.

உறவுகள் தொடர்கதை | Uravugal Thodarkathai KJY Gangai Amaran

உறவின் இயல்பை, இதை விட சிறப்பாக இனியெவரும் சொல்லவே முடியாது எனுமளவிற்கு, கவிதையின் உச்சத்தை தொட்டுவிட்டார் கங்கை அமரன். வீடுவரை உறவு, வாழ்வின் நிலையற்ற தன்மையை சொல்கிறதென்றால், இப்பாடல் உறவுகளின் பூடக நிலையை, உள்ளுறை கலையை, அன்பை, நிலையற்ற தன்மையை, வீழ்ந்தபின்னும் எழும் நம்பிக்கையை அளிக்கிறது. நூற்றாண்டிற்கான பாடல், எழுபதுகளின் சிறந்த பாடல் இது தான் என்பேன். படைப்புச்சத்தின் வெளிப்பாடு இவ்வரிகள். கல்வெட்டு.

உறவுகளின் மாயக்கவர்ச்சியை வியக்காத மனிதர்கள் யாருண்டு?? அதன் போதையில் கிறங்காத ஆன்மாவும் உண்டா? எல்லோருக்கும் ஒரு கிளை பற்றிக்கொள்ள, ஒரு மடி தலை சாய, இருவிழி கரைய.. இவ்வளவு தானே வாழ்க்கை.. ஒரு ஆண் இதைவிட அழகாக ஒரு பெண்ணிடன் தன் அன்பை விதைத்திட முடியுமா?? கங்கை அமரன்.. வணங்குகிறேன்.   உறவின் மேன்மையை, அதன் ஏக்கத்தை தாங்கி, எதிர்பார்த்து வாழும் பல உயிர்களுக்கு இந்தப்பாடல் சமர்ப்பணம், என் தோழிக்கும்! 

உறவுகள் தொடர்கதை... 
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம் 
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை... 
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...

வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாதம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புதுப் புனல்.. 
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது 
இன்பம் பிறந்தது 

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே
..


இதைத்தாண்டி ஒரு கவிஞன் எழுத எதுவுமில்லை, அவன் வரிகளுக்கு மதிப்பளித்து, மெட்டைத்தவிர ராஜா, எங்கும் தலைகாட்டவில்லை. கங்கை அமரனின் பெயர் கல்வெட்டாக பதிந்துவிட்டது. மகா கவிஞன். உணர்வுகளுக்கேற்ற சொற்கள், எளிமை, சந்தம்..அனைத்தும் ஒருங்கே அமைய, சொல்ல விழைந்ததை ஒரு புதுக்கவிதையின் வீச்சில் பதிவு செய்துவிட்டார். ராஜாவின் முதல் 10 பாடல்கள் என்றாலும் இப்பாடல் என் நினைவில் நிற்கும்.
Uravugal Thodarkathai - https://www.youtube.com/watch?v=7ua__BwWGfc


பன்னீர் புஷ்பங்களே | Panneer Pushpangale Kamal Gangai Amaran

கமல் அவர்களின் இரண்டாவது பாடல், ராஜா இசையில். தேர்ந்த பாடகருக்குரிய நுட்பத்துடன், அமரனின் வரிகளில் அருமையான பாடல்.
Panneer Pushpangale - https://www.youtube.com/watch?v=-5Rga99_ahU

வாழ்க்கை ஓடம் செல்ல | Vaazhkai Oodam Sella SJ Kannadasan

நான் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் இது. கவியரசர் உவமைகள் மடைதிறந்து வழியும். உதவாத புஷ்பங்கள் பெண்கள் :(
Vaazhkkai Odam sella - https://www.youtube.com/watch?v=2rbvJJlvACM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக