வெள்ளி, 17 ஏப்ரல், 2015

33 - முள்ளும் மலரும்| Mullum Malarum - 1978


இது ஒரு சிறந்த ஆண்டு தமிழ் திரையுலகுக்கு. புது இளைஞர்கள் இயல்பான களங்களில், மக்களின் வாழ்க்கையை வெள்ளித்திரைக்குள் செதுக்க, அதற்கு பெரிதும் துணைபுரிந்தது, ராஜா’வின் இசை. இசையின் மூலமே அடுத்த காட்சிக்கான ஒரு தொடர்பை ஏற்படுத்தி இயக்குநர்களின் மனவோட்டத்தை மிகச்சரியாக மக்களுக்கு கடத்தினார்.

இந்த புது அலையின் மிக முக்கியமான கண்ணி, இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும் படத்தின் மூலம், மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுத்தார். எழுத்தாளர் உமாசந்திரனின் நாவலை திரைமொழிக்கு ஏற்ப  சில மாறுதல்களுடன் படமாக்கி,  இலக்கியத்திற்கும், திரைப்படங்களுக்குமான இடைவெளியை குறைத்தார்.

இந்த படத்தில், ராஜாவின் பங்கு மிக முக்கியமானது. ஒரு அறிமுக இயக்குநரின் படத்தை, அது வெளிவரும் முன் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் கடினமான பணி, ஆனால் ராஜாவுக்கு அது தினசரி வழக்கமாகிவிட்டது. பாடல்களை முதன்முதலில் கேட்ட தமிழ் ரசிகர்களின் மனவோட்டத்தை இப்பொழுது நினைத்தாலும், மனம் நெகிழ்ந்து அந்த காலகட்டத்திற்கே செல்கிறது, அதுதான் இசையின் பலம்.


செந்தாழம் பூவில்
K.J.Yesudas
Kannadasan
அடிப்பெண்ணே
Jency Anthony
Panchu Arunachalam
ராமன் ஆண்டாலும்
S.P.Balasubramaniam / L.R.Anjali / Chorus
Gangai Amaran
நித்தம் நித்தம்
Vani Jayaram
Gangai Amaran
மான் இனமே
ilaiyaRaaja
???

செந்தாழம்பூவில் | Senthazham poovil KJY

இந்தப்பாடலின் முதல் சிறப்பு, ஆண் குரலில் வரும் மிக நீண்ட prelude till now(1978).  மலைகளின் வளைவுகளைப்போன்றே வளைந்து வளைந்து செல்லும் பாடல். குழல், வயலின், கிடார்.. இன்றும் மலைகளுக்கு செல்பவர்களின் விருப்பப்பாடல். இதுவரை 10கோடி முறையாவது ஒலித்திருக்கும். கவியரசரின் வரிகளும் மலையழகின் உன்னதங்களை கவித்துவமாக வெளிப்படுத்தியிருக்கும். மலையின் திடீர் வளைவுகளைப் போலவே preludeன் குரலிசைக்கு பின்பு வரும் கருவியிசையில் திடீர் திடீரென ஒடித்து ஓட்டுவார் ராஜா, கேட்டுப்பாருங்களேன்.. https://www.youtube.com/watch?v=JWGwgrk47Qo


அடிப்பெண்ணே | Adippenne Jency

பருவ வயதினள் அன்றாடங்களின் இன்பங்களை, இளமையின் வனப்புகளை வாழ்த்திப்பாடும் கவிதையான ஒரு பாடல். கவிஞர்கள் கற்பனையில் திளைக்கும் கொண்டாட்டமான சூழல் இது. மனம் போல எழுதலாம், வானில் திரியலாம், கடலில் கலக்கலாம். ஜென்சியின் இனிமையான குரலில் காவெல்லாம் ஹா’வாகிறது.
https://www.youtube.com/watch?v=k0F8PvI9vLQ

ராமன் ஆண்டாலும் | Raman Aaandaalum SPB

பாடலின் இயங்குவெளி தாண்டி செல்வதில்லை என்றாலும், சில பாடல்கள் பொதுவெளியில் மறக்கவியலா படிமங்களாக நிலைபெற்றுவிட்டது. அதை சொல்லத்தான் வேண்டும். அதிகாரத்திற்கு எதிராக அடித்தட்டு மக்களிடமிருந்து எழும் எதிர்வினைகள், பூச்சின்றி, காத்திரமாகவே எழும். எந்தச்சூழலிலும் ஒரு நடுத்தட்டு உதிர்க்கத்தயங்கும் சொற்களாக அவை இருக்கும். அதுபோன்ற ஒரு தொடர் இப்பாடலின் துவக்கமாக அமைய.. உழைக்கும் வர்கம் என்றும் தன் உழைப்பை நம்பி வாழ்க்கையை நகர்த்துவதை, அவர்களுக்கே உரிய திமிருடன், அழகியலுடன் சொல்லும் வரிகள் இவை:

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா

எக்காலத்திலும், எத்தனை அரசுகள் மாறினாலும் அவரவர் உழைப்பை நம்பி வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மாறுவதே இல்லை.

பாடலின் இயங்கியல் அதற்கும் மேலான ஒரு அழகிய உலகம். அந்த Prelude ல் மேளத்திற்கும், குரலிசைக்கும் இடையில் வரும் தந்தியிசை மனதில் கிளர்த்தும் உணர்வு இன்னதென பிடிபடுவதே இல்லை.. பின்வரும் சோகத்திற்கான முன்னுரையா? உடன் கிளம்புகிறது லேலேலே என பெண்களின் குரலிசை.. அம்மனை வாழ்த்திப்பாடுகிறது.. பின்பு நாயகன் தன் பாடலை பாடுகிறான். அம்மன் திருவிழாவில்... அவள் காவல் இருக்க.. எவன் ஆட்சி செய்தால் எனக்கென்ன.. என் தெய்வம் எனை காக்கும் என்ற கருத்தியலையும் அந்த அம்மன் வாழ்த்தின் மூலம் நமக்குள் செலுத்துகிறார் இயக்குநர், ராஜா மற்றும் பாடலாசிரியர்.
கை இருக்கு.. ஒழச்சி காட்டுற மனசிருக்கு.. அந்த நம்பிக்கையை அள்ளித்தருகிறது இந்தப்பாடல். https://www.youtube.com/watch?v=k4Szjiw9Ih0


நித்தம் நித்தம் | Nitham Nitham Vani Jayaram

உணவுப்பாடல். உறவுப்பாடல். ஆணின் இதயத்திற்குள் சுவைமொட்டின் வழிதான் இடம்பிடிக்க முடியும் என்ற நாட்டார் கருத்தியலில் திளைக்கிறது.  பாடல் பசியை தூண்டுகிறது. சிறுகாளான் வறுவலுடன் கூழை குடித்த காலமும் இருந்திருக்கு. உணவின் மீது அவள் குறிப்புகளை ஏற்றி, அவளையே உணவாக கருதி, அவனை உண்ண அழைக்கிறாள் நாயகி :))
https://www.youtube.com/watch?v=9JQgkQIeUzM


மான் இனமே | Maan Iname Ilayaraja

படத்தின் துவக்கத்தில் வரும் பாடல், இதன் ஆன்மா, படத்தின் இறுதியிலும் ஒலிக்கிறது. அண்ணன் தன் தங்கையை, உறவின் பெருமையை பாடும் பாடல். பாடலின் இறுதியில் வரும் மேளச்சத்தம் படத்தின் இறுதிக்காட்சியிலும் வருகிறது. இந்தப்பாடலை படத்தின் டைட்டிலோடு கேளுங்களேன். சுட்டி கீழே இருக்கு. இணையத்தில் முழப்பாடல் இல்லை.


இந்தப்படத்தின் இறுதிக்காட்சி, இயக்குநர் இசையமைப்பாளர் உறவின், நம்பிக்கையின் நல்லதொரு எடுத்துக்காட்டு. 10 நிமிட படத்தின் ஆன்மாவை இசையில் பொத்தி வளர்த்திருப்பார் ராஜா. இசையை தாண்டி, இயக்குநரின் முத்திரைகாட்சி, மகேந்திரனிடம் இருந்து, இந்த மகத்தான காட்சியை ராஜா’வின் பேரில் எழுதும் அளவிற்கு நான் செல்லவில்லை. இது மகேந்திரன் படம், ராஜா அந்த தளத்தில் அவருக்கு உற்றதுணை.
https://www.youtube.com/watch?v=jU629VRND6c

https://www.youtube.com/watch?v=Y9WE4DkKgLE  BGM Selected Scenes


முள்ளும் மலரும் முழுப்படம்

https://www.youtube.com/watch?v=pRBZiCprjFY


இந்த இணையின் வெற்றிகரமான துவக்கம். புதுவகை திரைமொழியின் துவக்கம், மறக்கமுடியாத இசைத்தொகுப்பு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக