சனி, 9 மே, 2015

38 - ப்ரியா | Priya - 1978

டிச 19, 1978


ராஜா இசையில் இயக்குநர் முத்துராமனின் 5வது படம், ரஜினியின் 7வது படம். ரஜினியின் இருப்பை உறுதிசெய்த படம். இன்றும் நினைக்கப்படும் படம். பாடல்கள் அனைத்தும் பஞ்சு எழுதியிருக்கிறார்.

பாடல்களை நாம் உள்வாங்கும் விதம் தனித்தன்மையானது. அவரவர் சூழல் சார்ந்து, முதன்முதலில் கேட்ட பின்புலம், நம் நினைவில் பதிந்தமுறை, அது சார்ந்த மனிதர்கள் என பல காரணிகள் நமை பாதிக்கும்.
தமிழகத்தில் பலருக்கும் டீக்கடை முதல் அறிமுகம் அல்லது ரேடியோ வழி என்றால், எனக்கு ராஜா பாடல்கள் பெருமளவு பள்ளிக்கு செல்லும் பேருந்தில் தான் அறிமுகம். தினமும் 2மணி நேரம் பாடல்கள், முழுக்க ராஜா. 

ஹத்திய குஷுக்காவா.. ”என்ன மொழி இது.. குஷ்கா பிரியாணின்னு” என்ற வியப்புடன் கேட்ட பாடல்கள். First Stereophonic Record, தமிழில். கேட்பவருக்கு அரங்கின் அமைப்பை, கருவி இசைக்கும் திசையை உணர்த்தும் தொழில்நுட்பம், இசையனுபவத்தின் அடுத்த கட்டமுயற்சி. :)




டார்லிங் டார்லிங் | Darling Darling 

P Suseela
இந்த தொகுப்பில், கருவியிசை தூக்கலாக, பல்லடுக்கு முறையில் இன்றும் அருமையாக ஒலிக்கும் பாடல் இது. BoneyM குழுவின் Sunny பாடலின் பாதிப்பு இருப்பதாக பரவலான கருத்து இருந்தாலும், எனக்கு தோன்றுவது..echo of darling darling darling gives that feel.. its more of a technical reference than a melodic inspiration.. as both songs have the same premise of Sunny ”echo” and ends with the word I love you.. the similarity is very evident. சரணங்களுக்கு அந்த கவலையில்லை, அவை என்றும் ராஜா’வின் தனிமுத்திரையில் தான் இயங்குகிறது. பல்லவி’யின் ஒற்றுமை, அமைப்பியல் ஒற்றுமை என்றே கருதுகிறேன்.
Darling Darling - https://www.youtube.com/watch?v=gWLSrbjnQ6E

அக்கரைச்சீமை அழகினிலே | Akkarai Seemai KJ

இந்த தொகுப்பின் ஆண் குரல் KJ, அனைத்து பாடலும் அவர்தான். ரஜினிக்கு பொருத்தமான குரலாக அமைந்தது. துவக்கயிசையிலிருந்தே பாடல் நம்மை உள்ளிழுக்க, கம்பீரமான குரலில் தாசண்ணா நமை அந்த நாட்டுக்கே அழைத்துச்செல்கிறார். முதல்இடையில் வரும் குரலிசையும் அதன் பின்னான வயலினும், குழலும் அப்படியொரு இனிமை. Akkarai Seemai - https://www.youtube.com/watch?v=TMLod3-p8Xg

என்னுயிர் நீதானே | En Uyir Neethane  KJY, Jency

இப்பாடலின் இயக்கவெளி ஒரு அற்புத உலகம். நின்று நிதானித்து பாடும் அமைதியான காதலர்கள் இல்லை, அவர்களுக்கு நேரமும் இல்லை. காட்டுவெள்ளமென அனைத்தயும் அடித்துச்செல்கின்றனர். எளிதான அறிமுகம், நாயகனின் வேண்டுகோள், உடனே ஓட்டம்பிடிக்கின்றனர் உலகை ரசிக்க.

காதல் இதுதான். செம்புலப்பெயல்நீர்.. நீயாரோ நான்யாரோ.. காதல் நமை சேர்த்தது, இதுவரை பலகாலம் கழிந்துவிட்டது, இந்நொடி முதல் வீணாக்காமல் அன்பை பரிமாறுவோம், அகிலத்தை மறப்போம்.
உன் அருகில்
உன் நிழலில்
உன் மடியில்
உன் மனதில்
ஆயிரம் காலங்கள்
வாழ்ந்திடவந்தேன்...
என காதலி சொல்வதைத்தாண்டி இந்த உலகில் காதலன் கேட்க விரும்பும் சொற்கள் எதுவுமுண்டா? பாடல் முழுவதையும் பெண் தான் முன்னெடுக்கிறாள், அவன் மீதான அவள் காதலை அன்புடன் வேண்டுகோளாக வைக்கிறாள். அவனும் சரி என்பதைப்போல ஓ ஓ என்றவாறு அங்கங்கே அவளின் மொழியில் பாடுகிறான். அவள் அவனறிந்த மொழியில் பாடுகிறாள்.. இதுதான் காதல்.. அவன் மொழியில் அவள் பாடல், அவள் மொழியில் அவன் பாட... புரிதலின் உச்சம்.
https://www.youtube.com/watch?v=1FUB7w0mgrk

ஏ பாடல் ஒன்று | Hey Padal Ondru  KJ, SJ

மற்றுமொரு இனிமையான பாடல். இனிமையான வரிகள். துள்ளலான பாடல். வீணை, தபலா என ராஜா விருந்து படைக்கிறார்.

ஓ ப்ரியா | Oh Priya KJY

தொகுப்பில் எனக்கு மிகவும் தாமதமாக அறிமுகமான பாடல். அதன்பின்பு, எனக்கு மிகவும் பிடித்த பாடலாக மாறிவிட்டது. இதன் Orchestrationக்காக மட்டுமே கேட்கும் பாடல். கடைசி ஒருநிமிட நரம்பிசை  அதகளம். ராமன் அனுமன் என கண்ணதாசத்தனத்தில் எழுதியிருப்பார் பஞ்சு. காட்சிக்கு பொருந்தினாலும், படிமங்கள் மிகவும் அயர்ச்சியளிக்கும் விதமான அரதப்பழசு. அதனால்.. மெலடியின் வடிவம், கருவியைசையில் என் கவனம்.
Oh Priya - https://www.youtube.com/watch?v=hytQN1sZqMY

புதன், 29 ஏப்ரல், 2015

36 - அவள் அப்படித்தான் | Aval Appadiththaan - 1978




















காலம் சிலரை மிகவும் கடினமாக கையாண்டு விடுகிறது. பிழை எங்கென்று யாரும் உய்த்துணர இயலாத நுட்பம் அது. அந்த மர்மம் தான் வாழ்க்கையின் சுவையை கூட்டுகிறது, எனினும் அதன் கொடூர வலியை தாங்கியவர்களின் எண்ணங்கள் வேறாக இருக்கலாம். அப்படி ஒரு விதியின் கைப்பிள்ளை ருத்ரைய்யா. அவரின் முதல் படம், ஒரே வெற்றிப்படம். எதையாவது செய்யவேண்டும் என்ற முனைப்பில் திரியும் ஆன்மா சராசரிகளுக்குள் சிக்குண்டு சிதைபடாமல், ஒரு அதியற்புத படைப்பை தந்து, தன்னை அலைகழித்த காலத்தை வெற்றி கண்டுவிட்டார் ருத்ரைய்யா. இந்த ஆண்டு மறைந்த அவரின் நினைவுகளுக்கு.. இந்தப்பதிவு. 

படத்தில் மூன்றே பாடல்கள். இயக்குநருக்கு தன் சுவடுகளை பதிக்க, எப்படி ஒரே படம் போதுமானதாக இருந்ததோ, அது போலவே, கங்கை அமரனுக்கும், தன் முத்திரையை பதிக்க, இந்த ஒரே பாடல் போதுமானதாகிவிட்டது.

உறவுகள் தொடர்கதை | Uravugal Thodarkathai KJY Gangai Amaran

உறவின் இயல்பை, இதை விட சிறப்பாக இனியெவரும் சொல்லவே முடியாது எனுமளவிற்கு, கவிதையின் உச்சத்தை தொட்டுவிட்டார் கங்கை அமரன். வீடுவரை உறவு, வாழ்வின் நிலையற்ற தன்மையை சொல்கிறதென்றால், இப்பாடல் உறவுகளின் பூடக நிலையை, உள்ளுறை கலையை, அன்பை, நிலையற்ற தன்மையை, வீழ்ந்தபின்னும் எழும் நம்பிக்கையை அளிக்கிறது. நூற்றாண்டிற்கான பாடல், எழுபதுகளின் சிறந்த பாடல் இது தான் என்பேன். படைப்புச்சத்தின் வெளிப்பாடு இவ்வரிகள். கல்வெட்டு.

உறவுகளின் மாயக்கவர்ச்சியை வியக்காத மனிதர்கள் யாருண்டு?? அதன் போதையில் கிறங்காத ஆன்மாவும் உண்டா? எல்லோருக்கும் ஒரு கிளை பற்றிக்கொள்ள, ஒரு மடி தலை சாய, இருவிழி கரைய.. இவ்வளவு தானே வாழ்க்கை.. ஒரு ஆண் இதைவிட அழகாக ஒரு பெண்ணிடன் தன் அன்பை விதைத்திட முடியுமா?? கங்கை அமரன்.. வணங்குகிறேன்.   உறவின் மேன்மையை, அதன் ஏக்கத்தை தாங்கி, எதிர்பார்த்து வாழும் பல உயிர்களுக்கு இந்தப்பாடல் சமர்ப்பணம், என் தோழிக்கும்! 

உறவுகள் தொடர்கதை... 
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம் 
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை... 
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...

வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாதம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புதுப் புனல்.. 
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது 
இன்பம் பிறந்தது 

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே
..


இதைத்தாண்டி ஒரு கவிஞன் எழுத எதுவுமில்லை, அவன் வரிகளுக்கு மதிப்பளித்து, மெட்டைத்தவிர ராஜா, எங்கும் தலைகாட்டவில்லை. கங்கை அமரனின் பெயர் கல்வெட்டாக பதிந்துவிட்டது. மகா கவிஞன். உணர்வுகளுக்கேற்ற சொற்கள், எளிமை, சந்தம்..அனைத்தும் ஒருங்கே அமைய, சொல்ல விழைந்ததை ஒரு புதுக்கவிதையின் வீச்சில் பதிவு செய்துவிட்டார். ராஜாவின் முதல் 10 பாடல்கள் என்றாலும் இப்பாடல் என் நினைவில் நிற்கும்.
Uravugal Thodarkathai - https://www.youtube.com/watch?v=7ua__BwWGfc


பன்னீர் புஷ்பங்களே | Panneer Pushpangale Kamal Gangai Amaran

கமல் அவர்களின் இரண்டாவது பாடல், ராஜா இசையில். தேர்ந்த பாடகருக்குரிய நுட்பத்துடன், அமரனின் வரிகளில் அருமையான பாடல்.
Panneer Pushpangale - https://www.youtube.com/watch?v=-5Rga99_ahU

வாழ்க்கை ஓடம் செல்ல | Vaazhkai Oodam Sella SJ Kannadasan

நான் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் இது. கவியரசர் உவமைகள் மடைதிறந்து வழியும். உதவாத புஷ்பங்கள் பெண்கள் :(
Vaazhkkai Odam sella - https://www.youtube.com/watch?v=2rbvJJlvACM

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

35 - சிகப்பு ரோஜாக்கள் | Sigapu Rojakkal - 1978

























பாரதிராஜாவின் 3வது படம், தமிழில். கிராமத்து கதைகளில் வெற்றிகண்ட பா.ரா, நகர்ப்புற களத்தில், சைக்கோ த்ரில்லரை கையாண்டு, மிகப்பெரிய வெற்றியை கண்ட படம் இது. 28, அக் 1978 அன்று வெளியாகி, 175 நாட்கள் ஓடியது. ராஜா இணை இயக்குநர் எனுமளவிற்கு அளவிற்கு படத்தின் ஆன்மாவாக பெரும்துணை புரிந்துள்ளார். பலநாட்கள் என் அன்றாட மாலைகளில் நான் விருப்பிக்கேட்க்கும் இசையாக இந்த பிண்ணனி இசை இருந்தது, இப்பொழுதும் கேட்டுக்கொண்டே தான் எழுதுகிறேன். 

படத்தின் முற்பகுதி முழுவதும் வரும் காதல் காட்சிகளை கிடார், பியானோவில் அற்புதமாக சிறைப்பிடித்திருப்பார். படத்தின் பாடல்களுக்கு செல்லும்முன், அந்த பின்னணி இசை சுட்டி உங்களுக்காக. https://www.youtube.com/watch?v=50pGKwCaT4E பாடல்களை காட்டிலும் சுவையான 22நிமிட இசையை நவீன் பிரித்தெடுத்திருக்கிறார். Vocal, Sax, Trumpet, Piano, Guitar கூட்டணியில் ஒரு கொண்டாட்டமான நகர்ப்புற இளைஞனின் மனநிலையை முதல் 10நிமிடங்களுக்கும் மேலான இசையில் உணரலாம். பாடலின் சிறுதுளி பாதிப்புமற்ற பின்னணி இசை. 10வது நிமிடத்தில் இசையின் நிறம் மாறுகிறது. ஒரு பரபரப்பு தொற்றுகிறது. ஏதோ ஒரு பயங்கரத்தை நமக்கு உணர்த்துகிறது. ட்ரம், தூரத்தில் ஒலிக்கும் குழல், மெல்ல இளகிய சூழலுக்கு மாறும் கிடார், திரும்ப பயமுறுத்தும் குழல் என ஒரு நாடகமே நடக்கிறது. 12.30ல் ஆரம்பமாகும் துரத்தல் இசை, இடையிடையே சோகத்தை தூவும் வயலின், மீண்டும் விரையும் டிரம், குழப்பமான synth ஒலிகள். 

இத்தனைக்கும் நடுவில், நாயகியின் குரலிசையில் ஒரு ராகம், குளிக்கும் ஒலி நீரை அளைப்பதில் புலப்படுகிறது. குழல் ஒரு சோகத்தை தாங்கி ஒலிப்பதை கவனியுங்கள். அவள் ஏகாந்தமாக பாடினாலும், அவளை பின் தொடரும் பயங்கரத்தை குறிப்புணர்த்துகிறது. ஒரு த்ரில்லர் சூழலுக்கான அனைத்து ஒலிக்குறிப்புகளுடன் நம்மை இருக்கையின் நுனிக்கு அழைத்துச்செல்கிறார். 19வது விநாடியில் ஆரம்பிக்கும் பயங்கர குரலிசை நம்மை பயத்தில் உறையவைக்கிறது, துரத்தும் ட்ரம், துயரத்திற்கு வயலின்.
https://www.youtube.com/watch?v=Yoo_WkRIgYU

இந்த பியானோ காதலன் ராஜா, இங்கிருந்து ஆரம்பிக்கிறார். Pure Jazz. படத்தில் இரண்டே பாடல்.

 இந்த மின்மினிக்கு | Intha Minminiku MVD-SJ  Kannadasan

Chimes நம் கவனத்தை கவரும் நொடி பீறிட்டு கிளம்புகிறது வயலின்.. (அந்த மணி ஒலி, படத்தில் பேருந்து நிறுத்த விளக்குகள், கார் நிறுத்த விளக்குகளுக்கு சேர்த்திருப்பார் பாரதிராஜா) முடிவில் கிடார் சேர அங்கிருந்து ரூ ரூ ரூ என சானகியம்மாவின் குரல், நமை பிடித்திழுத்து வானத்தில் ஏற்றுகிறது. துவக்க இசையில் தொலைந்த வயலின் மீண்டும் இடையிசையில் பரபரக்கிறது, கூடவே விசில் சத்தமும் சேர, சூழலின் குதூகலம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. இணைப்பாடலின் இயக்கவிதிகளின் உச்சம். முடிவில் அந்தச்சிரிப்பு என்றென்றும் நம்முடன் இருக்கும். :) மாண்டாச் (Montage) - நனவோடை அமைப்பில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப்பாடல்.

தான் சொல்ல நினைத்து சொல்லாமல் சென்ற இசைத்தேவைகளையும் அறிந்து, ராஜா இந்த படத்தின் பிண்ணனியை அமைத்திருந்ததாக பாராதிராஜா குறிப்பிட்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=Yoo_WkRIgYU

நினைவோ ஒரு பறவை | Ninaivo Oru Paravai Kamal-SJ Vaali

கமல், ராஜாவின் இசையில் பாடிய முதல் பாடல். துவக்க இசை இல்லை. ஹம்மிங் தான் பாடலின் முதல் கையெழுத்து, கனவில் நாயகி பாடலை ஆரம்பிக்க, நாயகன் எங்கிருந்தே வந்து மெதுவாக இணைகிறார் பாடலில். அந்த பா..பப..பாப...எங்கிருந்தோ ஒலிக்கும்.. நாயகியின் குரல் அளவிற்கு ஒலிக்காது, நாயகி கனவில் பாடுவாதால்.. பாடல் ஆரம்பித்தப்பின் அவர் மெதுவாக வந்து இணைகிறார். படத்திலும் இதை பா.ரா அருமையாக காட்சிப்படுத்தியிருப்பார். தூரத்திலிருது தெளிவற்ற உருவமாக துவங்கி மெதுவாக வடிவம் பெறுவார் நாயகன் கமல். நாயகின் ராகத்தை கலைக்காதவாறு அமைந்திருக்கும் அந்த பா..பபபா...ஒத்திசைவின் நாயகன் ராஜா!! இடையிசைக்கு பின்பு நாயகியும் அதே பா..பபபா என பாடுவார், நாயகனின் ராகத்துட்டன் ஒத்திசைந்து.

நினைவோ ஒரு பறவை... வாலி அவர்களின் அற்புத வரிகள். பனிக்காலத்தில் நான் வாடினால் உன்பார்வை தான் என் போர்வையோ!!
https://www.youtube.com/watch?v=ZR-3IoaON6g


https://www.youtube.com/watch?v=OHgX3KX5O2Y LKA Connection covered the title and extended theme of Sigappu Rojakkal in the name of RedRose. True to the soul of the theme. Like it very much. Hightligthing the nuances of the theme and giving us the flavor of their Jazz depth. Hope you enjoy the album and this 30min of BGMs. 

புதன், 22 ஏப்ரல், 2015

34 - கண்ணன் ஒரு கைக்குழந்தை | Kannan Oru Kaikuzanthai - 1978

மீண்டும் சிவக்குமார். சுமித்ரா நாயகி. இயக்கம் N Venkatesh, ராஜாவுடன் இரண்டாவது படம். பாடல்கள் கண்ணதாசன், புலமைப்பித்தன். படம் செப் 8 அன்று வெளியாகியிருக்கு. பாடல்களை கேட்ப்போம்.
http://play.raaga.com/tamil/album/Kannan-Oru-Kai-Kuzhandhai-songs-T0001638 அனைத்து பாடல்களும் இந்த பக்கத்தில் இருக்கிறது. 
http://tamiltunes.com/kannan-oru-kai-kuzhanthai.html இங்கேயும் கேட்க்கலாம். 

கண்ணன் அருகே
Vani Jayaram
Kannadasan
N.Venkatesh
மேகமே தூதாக வா
S.P.Balasubramaniam / P.Susheela
Kannadasan
N.Venkatesh
மோக சங்கீதம்
P.Susheela
Kannadasan
N.Venkatesh

கண்ணன் அருகே | Kannan Aruge Vani Jayaram

அழகான வரிகள், கேட்டவுடன் ஈர்க்கும் மெட்டு, மெல்லிய ClubDiscoJazz. வாணியம்மாவின் குரல், பாடலை மிகவும் இனிமையாக்குகிறது. இந்த வகைமைக்கு உண்டான முத்திரைகளுடன் அமைந்திருக்கிறது இந்த பாடல். கேட்க கேட்க இனிமை. மெட்டின் வேகம், சூழலுக்கு மிகப்பொருத்தம். 

மேகமே தூதாக வா | Megame Thoothaga Vaa SPB / P Suseela

நல்லதொரு இணைப்பாடல். காற்றோட்டமான கட்டமைப்பு. கிடாரும் வயலினுமே relaxedஆக ஒலிக்கிறது. அதன் மேலே குரல்களும் ஒரு மலைப்பிரதேசம், ஒரு ஆற்றோரம் என்பதான சூழலில் பாடலை இனிமையாக்குகிறது. 

மோக சங்கீதம் | Moga Sangeedam P Suseela

இரவின் இனிமை, நாயகியை மோகத்தில் ஆழ்த்த, எளிமையாக அதை வெளிப்படுத்துகிறார். நீரோடை போன்ற பாடல். நாணம் பின்னுக்கிழுக்கும் வலையிலான மோகம். அதை அழகான மெட்டில் வெளிப்படுத்துகிறார் ராஜா, கவியரசரின் வரிகளும் அப்படியே பொருந்திப்போகிறது. 

மூன்றே பாடல்கள், மூன்றும் அருமை. 

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

33 - முள்ளும் மலரும்| Mullum Malarum - 1978


இது ஒரு சிறந்த ஆண்டு தமிழ் திரையுலகுக்கு. புது இளைஞர்கள் இயல்பான களங்களில், மக்களின் வாழ்க்கையை வெள்ளித்திரைக்குள் செதுக்க, அதற்கு பெரிதும் துணைபுரிந்தது, ராஜா’வின் இசை. இசையின் மூலமே அடுத்த காட்சிக்கான ஒரு தொடர்பை ஏற்படுத்தி இயக்குநர்களின் மனவோட்டத்தை மிகச்சரியாக மக்களுக்கு கடத்தினார்.

இந்த புது அலையின் மிக முக்கியமான கண்ணி, இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும் படத்தின் மூலம், மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுத்தார். எழுத்தாளர் உமாசந்திரனின் நாவலை திரைமொழிக்கு ஏற்ப  சில மாறுதல்களுடன் படமாக்கி,  இலக்கியத்திற்கும், திரைப்படங்களுக்குமான இடைவெளியை குறைத்தார்.

இந்த படத்தில், ராஜாவின் பங்கு மிக முக்கியமானது. ஒரு அறிமுக இயக்குநரின் படத்தை, அது வெளிவரும் முன் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் கடினமான பணி, ஆனால் ராஜாவுக்கு அது தினசரி வழக்கமாகிவிட்டது. பாடல்களை முதன்முதலில் கேட்ட தமிழ் ரசிகர்களின் மனவோட்டத்தை இப்பொழுது நினைத்தாலும், மனம் நெகிழ்ந்து அந்த காலகட்டத்திற்கே செல்கிறது, அதுதான் இசையின் பலம்.


செந்தாழம் பூவில்
K.J.Yesudas
Kannadasan
அடிப்பெண்ணே
Jency Anthony
Panchu Arunachalam
ராமன் ஆண்டாலும்
S.P.Balasubramaniam / L.R.Anjali / Chorus
Gangai Amaran
நித்தம் நித்தம்
Vani Jayaram
Gangai Amaran
மான் இனமே
ilaiyaRaaja
???

செந்தாழம்பூவில் | Senthazham poovil KJY

இந்தப்பாடலின் முதல் சிறப்பு, ஆண் குரலில் வரும் மிக நீண்ட prelude till now(1978).  மலைகளின் வளைவுகளைப்போன்றே வளைந்து வளைந்து செல்லும் பாடல். குழல், வயலின், கிடார்.. இன்றும் மலைகளுக்கு செல்பவர்களின் விருப்பப்பாடல். இதுவரை 10கோடி முறையாவது ஒலித்திருக்கும். கவியரசரின் வரிகளும் மலையழகின் உன்னதங்களை கவித்துவமாக வெளிப்படுத்தியிருக்கும். மலையின் திடீர் வளைவுகளைப் போலவே preludeன் குரலிசைக்கு பின்பு வரும் கருவியிசையில் திடீர் திடீரென ஒடித்து ஓட்டுவார் ராஜா, கேட்டுப்பாருங்களேன்.. https://www.youtube.com/watch?v=JWGwgrk47Qo


அடிப்பெண்ணே | Adippenne Jency

பருவ வயதினள் அன்றாடங்களின் இன்பங்களை, இளமையின் வனப்புகளை வாழ்த்திப்பாடும் கவிதையான ஒரு பாடல். கவிஞர்கள் கற்பனையில் திளைக்கும் கொண்டாட்டமான சூழல் இது. மனம் போல எழுதலாம், வானில் திரியலாம், கடலில் கலக்கலாம். ஜென்சியின் இனிமையான குரலில் காவெல்லாம் ஹா’வாகிறது.
https://www.youtube.com/watch?v=k0F8PvI9vLQ

ராமன் ஆண்டாலும் | Raman Aaandaalum SPB

பாடலின் இயங்குவெளி தாண்டி செல்வதில்லை என்றாலும், சில பாடல்கள் பொதுவெளியில் மறக்கவியலா படிமங்களாக நிலைபெற்றுவிட்டது. அதை சொல்லத்தான் வேண்டும். அதிகாரத்திற்கு எதிராக அடித்தட்டு மக்களிடமிருந்து எழும் எதிர்வினைகள், பூச்சின்றி, காத்திரமாகவே எழும். எந்தச்சூழலிலும் ஒரு நடுத்தட்டு உதிர்க்கத்தயங்கும் சொற்களாக அவை இருக்கும். அதுபோன்ற ஒரு தொடர் இப்பாடலின் துவக்கமாக அமைய.. உழைக்கும் வர்கம் என்றும் தன் உழைப்பை நம்பி வாழ்க்கையை நகர்த்துவதை, அவர்களுக்கே உரிய திமிருடன், அழகியலுடன் சொல்லும் வரிகள் இவை:

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா

எக்காலத்திலும், எத்தனை அரசுகள் மாறினாலும் அவரவர் உழைப்பை நம்பி வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மாறுவதே இல்லை.

பாடலின் இயங்கியல் அதற்கும் மேலான ஒரு அழகிய உலகம். அந்த Prelude ல் மேளத்திற்கும், குரலிசைக்கும் இடையில் வரும் தந்தியிசை மனதில் கிளர்த்தும் உணர்வு இன்னதென பிடிபடுவதே இல்லை.. பின்வரும் சோகத்திற்கான முன்னுரையா? உடன் கிளம்புகிறது லேலேலே என பெண்களின் குரலிசை.. அம்மனை வாழ்த்திப்பாடுகிறது.. பின்பு நாயகன் தன் பாடலை பாடுகிறான். அம்மன் திருவிழாவில்... அவள் காவல் இருக்க.. எவன் ஆட்சி செய்தால் எனக்கென்ன.. என் தெய்வம் எனை காக்கும் என்ற கருத்தியலையும் அந்த அம்மன் வாழ்த்தின் மூலம் நமக்குள் செலுத்துகிறார் இயக்குநர், ராஜா மற்றும் பாடலாசிரியர்.
கை இருக்கு.. ஒழச்சி காட்டுற மனசிருக்கு.. அந்த நம்பிக்கையை அள்ளித்தருகிறது இந்தப்பாடல். https://www.youtube.com/watch?v=k4Szjiw9Ih0


நித்தம் நித்தம் | Nitham Nitham Vani Jayaram

உணவுப்பாடல். உறவுப்பாடல். ஆணின் இதயத்திற்குள் சுவைமொட்டின் வழிதான் இடம்பிடிக்க முடியும் என்ற நாட்டார் கருத்தியலில் திளைக்கிறது.  பாடல் பசியை தூண்டுகிறது. சிறுகாளான் வறுவலுடன் கூழை குடித்த காலமும் இருந்திருக்கு. உணவின் மீது அவள் குறிப்புகளை ஏற்றி, அவளையே உணவாக கருதி, அவனை உண்ண அழைக்கிறாள் நாயகி :))
https://www.youtube.com/watch?v=9JQgkQIeUzM


மான் இனமே | Maan Iname Ilayaraja

படத்தின் துவக்கத்தில் வரும் பாடல், இதன் ஆன்மா, படத்தின் இறுதியிலும் ஒலிக்கிறது. அண்ணன் தன் தங்கையை, உறவின் பெருமையை பாடும் பாடல். பாடலின் இறுதியில் வரும் மேளச்சத்தம் படத்தின் இறுதிக்காட்சியிலும் வருகிறது. இந்தப்பாடலை படத்தின் டைட்டிலோடு கேளுங்களேன். சுட்டி கீழே இருக்கு. இணையத்தில் முழப்பாடல் இல்லை.


இந்தப்படத்தின் இறுதிக்காட்சி, இயக்குநர் இசையமைப்பாளர் உறவின், நம்பிக்கையின் நல்லதொரு எடுத்துக்காட்டு. 10 நிமிட படத்தின் ஆன்மாவை இசையில் பொத்தி வளர்த்திருப்பார் ராஜா. இசையை தாண்டி, இயக்குநரின் முத்திரைகாட்சி, மகேந்திரனிடம் இருந்து, இந்த மகத்தான காட்சியை ராஜா’வின் பேரில் எழுதும் அளவிற்கு நான் செல்லவில்லை. இது மகேந்திரன் படம், ராஜா அந்த தளத்தில் அவருக்கு உற்றதுணை.
https://www.youtube.com/watch?v=jU629VRND6c

https://www.youtube.com/watch?v=Y9WE4DkKgLE  BGM Selected Scenes


முள்ளும் மலரும் முழுப்படம்

https://www.youtube.com/watch?v=pRBZiCprjFY


இந்த இணையின் வெற்றிகரமான துவக்கம். புதுவகை திரைமொழியின் துவக்கம், மறக்கமுடியாத இசைத்தொகுப்பு. 

திங்கள், 13 ஏப்ரல், 2015

31 - கிழக்கே போகும் ரயில் | Kizhakke Pogum Rayil - 1978




 








நான் இந்தப்படம் பார்த்ததில்லை. இந்தப்படம் குறித்து நான் சொல்லவும் தேவையில்லை. பாடல்கள் எல்லோரும் அறிந்த ஒன்று. இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது, இந்த படத்தின் ஆன்மாவை ஒரு பெண்ணின் குரலில் பொத்திவைத்த ராஜாவின் அதிசிறந்த இசைமொழியை. உங்களுக்காக, அந்த 10நிமிட நீள இசைத்துணுக்கை சத்தமேகத்தில் ஏற்றியிருக்கிறேன்.

எத்தனை உணர்வுகள் பொங்கி வழிகிறது அந்தக் குரலில்!! காதல், ஏக்கம், பிரிவு, தனிமை, வலி, கையறு நிலை, காத்திருத்தல் இன்னும் பெயரிடப்படாத எத்தனையோ உணர்வுகளை உள்ளடக்கி வெளிப்படும் அந்தக்குரலிசை, அவளை மடியில் கிடத்தி ஆறுதல்படுத்த நமை தூண்டுகிறது. அதுதான் இசையமைப்பாளனின் வெற்றி, ஒரு தேர்ந்த கலைஞனின் வித்தை. 

கோவில்மணி ஓசை
Malaysia Vasudevan / S.Janaki
Kannadasan
மலர்களே
Malaysia Vasudevan / S.Janaki
Sirpy
மாஞ்சோலை கிளிதானோ
P.Jayachandran
Muthulingam
பூவரசம் பூ
S.Janaki
Gangai Amaran
நீயும் நானும்
Malaysia Vasudevan
Kannadasan
ஏதோ பாட்டு ஏதோ ராகம்
ilaiyaRaaja
Gangai Amaran

 கோவில் மணி

https://www.youtube.com/watch?v=TlLDvNqV_gs அனைத்து பாடல்களும், மலர்களே தவிர்த்து- காணொளி. 

மலர்களே | Malargale – MVD, SJ

பாடல் படத்தில் இடம்பெறவில்லை, அதனால் தற்போதைய தலைமுறை கேட்டிருக்க, பார்த்திருக்க வாய்ப்பில்லை. கல்யாண பாடல். நாயகனும் நாயகியும் மணம் புரிந்துகொள்வது போன்ற கனவுப் பாடலாக கேட்டு வாங்கியிருப்பார் பா.ரா. படத்தில் இல்லையென்றாலும், நமக்கு ஒரு அழகான இணைப்பாடல் கிடத்துவிட்டது. என்ன ஒரு அழகான பாடல். துவக்க இசை முதல் கல்யாண களை பாடல் முழுவதும். வாசு சானகி இணை எப்போதும் விருப்பமான ஒன்று. முதல் சரணம் முழுவதும் சானகியின் குரலிசை, வாசுவிற்கு துணையாக ஒலிக்க, இரண்டாம் சரணத்தில் இருவரும் இணைந்து பாட.. என்றென்றைக்குமான ஒரு பாடல். In love with Janaki’s humming.

மாஞ்சோலை கிளிதானோ | Manjolai Kilithano Jeyachandran

படைப்பாளி தன்னையே வெற்றிகண்டு வெற்றிகண்டு முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். தன்னுடன் மட்டுமே அவன் போட்டி, தன்னை புதுப்பித்து ஓடிக்கொண்டே இருப்பது தான் அவனை முன்னெடுத்துக்கொண்டே இருக்கும். காதலியின் வனப்புகளை புகழ்ந்து பாடும் ஒரு கவிஞன், அந்த சூழலுக்கு ஒரு பாடல் என்று தான் பாரா சொல்லியிருப்பார். அதற்கு ராஜாவின் மனவோட்டம் அளித்த மெட்டு, மிரட்சியளிக்கிறது.

ஒரு கவிஞன் பலவித வடிவங்களில்( வெண்பா, புதுக்கவிதை, வசனகவிதை, etc) கவிதை இயற்றுவதை மனதில் வைத்து தான் ராஜா இந்தப்பாடலை மெட்டமைத்திருக்க வேண்டும். கவனித்து கேட்டால், முதல் சரணத்திற்கு பிறகு பாடல் வேறு பாதையில் செல்கிறது. பல்லவி-சரணம்-பல்லவி-சரணம் என செல்வதில்லை. உணர்ச்சிவசப்பட்ட ஒரு கவிஞன் தன் கவிதைவரிகளை வெறிகொண்டு படிப்பதை போல, மின்னல் வெட்டுவதை போல.. அத்தனை வேகமான ஒரு இரண்டாம் சரணம், அதை சரணம் என்பதா என்றே தெரியவில்லை. முதல் சரணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட மெட்டு, நடை, வேகம்.. ராஜா சொன்னதை போல, எத்தகைய மெட்டு கொடுத்தாலும், I like to challenge myself J
  

பூவரசம் பூ | Poovarasam Poo SJ

ரயில் இந்தப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரமாக வருவதால், அதன் இயக்கத்தை ஒத்தே அமைந்திருக்கிறது இந்தப்பாடல். ரயில் எப்படி மெதுவாக ஆரம்பித்து வேகம் பிடிக்கிறதோ, அதுபோலவே பாடலும் ஆரம்பித்து வேகம் பிடித்து, சரணத்தில் சென்று நிற்கிறது. பாடல் முழுதும் வரும் ரயிலின் ஓசை மிகவும் அருமை மேலும் ரயில் ஓடுவது போன்றே பாடகி பாடிகாட்டுவது நம்மை நம் சிறுவயதிற்கே அழைத்துச்செல்கிறது. J பட்டிதொட்டி hit.
https://www.youtube.com/watch?v=5GdEfZGHW9w





கோவில்மணி | KovilMani MVD

படத்தில் வரும் ஒரே இணைப்பாடல். அழகாக, அமைதியாக, தேவையான இடங்களில் மேலேறி கீழிறங்கி ஒரு நதியின் நடைபோல செல்கிறது பாடல். இடையிசையிலும் நதியின் நடை.  https://soundcloud.com/sivakumar-sivaraj/koilmani-osai-kizhake-pogum

நீயும் நானும் | Neeyum Naanum

கவிஞனின் மனம், சமத்துவ உலகையே நாடும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் அடிப்படையில் செல்கிறது பாடல். காவலுக்கு சென்ற இடத்திலும் மனம் சத்துவத்தை நாடி படும் பாடல். வரிகளின் கூர்மையில் செல்கிறது பாடல். 
https://www.youtube.com/watch?v=NtWJb3SzCDg



ஏதோ பாட்டு ஏதோ ராகம் | Etho Pattu Etho Ragam


படத்தின் சூழலுக்கு தேவையான நேரங்களில் அமையும் சோகப்பாடலுக்கு ராஜா பாடும் பாடல் சரியாக அமைந்துவிடும். இதுவும் அவ்வகை. 
https://www.youtube.com/watch?v=19uLr-v5Pkw



படம் ஆக 02, 1978 அன்று வெளியாகி அடுத்த ஆண்டு வரை வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபோட்டிருக்கு. ராதிகா நாயகியாக அறிமுகம். மீண்டும் அந்த பிண்ணனி இசையை ஓடவிட்டு அந்த குரலின் மாய உலகில் கரைகிறேன். என்றென்றும் ராஜாவுக்கு கடன்பட்டிருக்கு தமிழ்கூறு நல்லுலகம். :) 

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

30 - வட்டத்துக்குள் சதுரம் | Vattathukkul Sathuram - 1978

சூலை, 28 அன்று வெளியான படம். சில படங்களுக்கு பின்பு, பஞ்சு முழுப்பாடல்களையும் எழுதியிருக்கிறார். இயக்கம் SPமுத்துராமன். சில படங்கள், ஏனோ காலத்தில் நிலைத்து நின்றுவிடுகிறது. இப்படமும், அப்படி நிலைத்து நிற்க, இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்தான் அடிப்படை.

இதோ இதோ
SJ, BS Sasireka
 PAC
காதலெனும் காவியம்
 Jikki
 PAC
ஆடச்சொன்னாரே
 Jency
 PAC
பேரழகு மேனி
 SJ
 PAC

இதோ இதோ | Itho Itho SJ, BSS

சிறுவயது எல்லோருக்கும் உவப்பானது. கவலைகளற்ற, பொறுப்புகளற்ற, வாழ்வின் மிகவும் மகிழ்வான காலகட்டம் என்றால் அது சிறுவயது முதலான பதின்மம் தான். நட்பு, கல்வி, விளையாட்டு என அழகாக செல்லும். இதிலே பெண்களின் உலகம் தனியானது. அவர்களின் நட்பும் ஆழமானது. அம்மாவும் அக்காவும் அவர்களின் பள்ளித்தோழமைகளை குறித்து அதிகம் பேசியது நினைவிருக்கிறது. அதற்கு மேலும் ஒரு காரணம், திருமணம் ஆகும் வரை ஒரே ஊரில் இருக்கும் தன்மையாகவும் இருக்கலாம். ஆண்களின் வாழ்க்கை அதற்கு நேர்மாறனது.

இந்தப்பாடல் எல்லோருக்குமே அவர்களின் வளர்பருவத்தை நினைவுபடுத்தும். இதில் நடித்த ஒரு குழந்தை, பின்னாளில் சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் நாயகியாக நடித்தார். ஒரு தாலாட்டின் ஒழுங்கமைவு கொண்டு, தோழிகள் பேசிக்கொள்வது போல அமைந்திருக்கும் பாடல். எல்லோருக்கும் உவப்பான பாடல். கேட்டு மகிழுங்கள்.

ஆடச்சொன்னாரே | Aadachonnare Jency

Clubjazz.. முன்பு Disco கேட்டிருக்கிறோம். இது கொஞ்சம் மென்மையாக, அதிரடி தாளங்கள் இன்றி, ஜாஸ் மெலடியில் அற்புதமான பாடல். https://www.youtube.com/watch?v=0fZFKS_Pks4 Spanish Guitars, அவ்வளவு அழகாக ஒலிக்கிறது, பாடல் முழுவதும்.

காதலெனும் காவியம் | Kathalenum Kaviyam Jikki

நாயகி காதல் நினைவில் பாடும் பாடல். இயல்பான மெட்டில், ஆர்பாட்டங்களின்றி, மெதுவான் நடையில் செல்கிறது.
  

பேரழகு மேனி | Perazhagu Meni SJ

இதுவும் Clubjazz பாடல், அதே க்ளப் சூழலில், படத்தின் தலைப்பும் இதில் வரிகளாக வருகிறது. படத்தின் மிக முக்கியமான பாடலாகவும் தெரிகிறது. சோகமான இடையிசை, அதேநேரம், நடனப்பாடலாகவும் வருகிறது. https://www.youtube.com/watch?v=u9FaEvQfj7w


முழுப்படமும் இங்கு காணலாம். https://www.youtube.com/watch?v=u9FaEvQfj7w